நீள்கால வாழ்வதனில் நிலையற்ற வடுக்களிங்கு
மறந்தாலும் நிலைத்திருக்கும் மாயம்தான் என்மனதில்..
சிலகாலம் வாழ நினைத்தேன் சில்லென்று குளிர்ந்திருந்தேன்
வாய்ச்சொல்தான் இன்றும் சொந்தம் மூச்சுகாற்றோடும் உலவுதிங்கு..

நாவினிக்க பேசினாலும் சுற்றத்தில் நயவஞ்சக பார்வைகளே
மனம் விட்டு கதறினாலும் மனிதராய் மதிப்போர் எவருமில்லை. .
அநாதியான ஆவியுடன் இன்றும் நானும் அநீதியுடன் பிணைந்தேனே..
சமாதிதான் வேண்டுமென்று சாகவும் துணிந்தேனே..

பிறந்ததினால் செய்கடமை நினைவில் ஞாபகமாய் சுழல்கிறது..
நினைத்தாலும் செய்வதற்கு என் நிழல் கூட மறுக்கின்றது..
மதில்மேல் பூனைபோல நானும் மறுமொழியை தேடினேனே
மறுமொழியும் கிட்டவில்லை மறைமுகமாய் இன்று ஒதுங்கினேனே..

வெட்டவெயிலும் கூட என்னையின்று வெறுத்துத்தான் பார்க்குதிங்கு
உள்மனத்தில் சுட்ட வடுக்களும் கூட ஆறாமல் வலிக்கிறது..
புவியிர்ப்பு விசைகூட என்னில் தோன்றாமல் குறைகிறதே
நிலைக்குத்தாய் இல்லாமல் நானும் நிலையற்று போனேனே..

சிறகெதுவும் இல்லாமல் நடுவானில் நானுமிங்கு பறந்து திரிகிறேனே
கொடிய வேதனையை தந்தவனை நானும் சோகமாயே வாழ்த்தினேனே.
சிலிர்ப்பான என்னிதயம் என்றோ சிதறலாகி போனதே அதை பொருத்த சில்லறைகள் கொடுத்தாலும் பிறருக்கு வீண் செலவாகி போகுமோ....

உடலதுவும் உயிருடன் மோதலாகி பிரியுமோவென்று கணப்பொழுதும்
கவலைதான் கணக்கெடுப்பார் எவருள்ளார்..
விடைதெரியா கணைகளால் தினமும் கேள்விக்குறிதான் என்னில்
விளையாட்டாய் விடை சொன்னாலும் விலைமதிப்பும் அதற்கில்லை..
சொர்க்கமா நரகமா இல்லை பூவுலகில் அலையும் ஆவியா
புதுமையான புதிர்களுடன் அந்தரத்தில் நானின்று..